குரூப்-2 தேர்வை 99 பேர் எழுதினர்
ஊட்டியில் குரூப்-2 தேர்வை 99 பேர் எழுதினர்.
ஊட்டி
ஊட்டியில் குரூப்-2 தேர்வை 99 பேர் எழுதினர்.
குரூப்-2 தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி வெளியிட்டது. அதன்படி முதல்நிலை தேர்வு எழுதியதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 55,071 பட்டதாரிகள் அடுத்தக்கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. காலையில் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வும், மதியம் பொதுத்தேர்வும் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை என 2 கட்டங்களாக தேர்வு நடந்தது.
கலெக்டர் ஆய்வு
இந்த தேர்வை எழுத நீலகிரி மாவட்டத்தில் 106 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று நடைபெற்ற தேர்வை 99 பேர் எழுதினர். 7 பேர் எழுத வரவில்லை.
தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனபிரியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தேர்வர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். மேலும் போக்குவரத்து வசதிக்காக, சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
மேலும் தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.