9-ம் நூற்றாண்டு பாண்டியர் கால வட்டெழுத்து, கற்செக்கு கண்டெடுப்பு


9-ம் நூற்றாண்டு பாண்டியர் கால வட்டெழுத்து, கற்செக்கு கண்டெடுப்பு
x

உசிலம்பட்டி அருகே 9-ம் நூற்றாண்டு பாண்டியர் கால வட்டெழுத்து, கற்செக்கு கண்டெடுக்கப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி,

வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதி, பேராசிரியர் அழகர்சாமி, காந்திராஜன், அருண் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெரியகட்டளை கிராமம் மேட்டுக்காடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து செக்குக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. 32 அங்குலம் வெளிவிட்டமும், 23 அங்குலம் உள் விட்டமும் 14 அங்குலம் ஆழமும் கொண்ட இச்செக்கு உரலின் வட்டமான மேல் விளிம்பில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் அறிஞர்கள் சொ.சாந்தலிங்கம், சு.ராஜகோபால் ஆகியோரின் துணையோடு இக்கல்வெட்டு வாசித்தறியப்பட்டது.

அதில் ஸ்ரீகுடிகம் நல்லூர் என்ற ஊரைச் சேர்ந்த ஊர் அவையினரால் (ஊரார்) இக்கற்செக்கு அமைக்கப்பட்டுள்ளதும் அதில் பட்ட சாலியன் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளதையும் அறிய முடிகிறது. அப்பெயர் கற்தச்சரின் பெயராகவோ ஊர் அவையைச் சார்ந்தவரின் பெயராகவோ இருக்கலாம். முற்காலப் பாண்டியர் காலத்தில் கோவில்களுக்கு நிலதானம் வழங்கப்பட்ட தேவதான கிராமங்களும், பிரமாணர்களுக்கு நில தானம் வழங்கப்பட்ட பிரம்மதேயக் கிராமங்களும் நல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இப்பகுதியில் இடைக்காலத்தைச் சேர்ந்த உடைந்த பானை ஓடுகள், உடைந்த செங்கல், சிறிய அளவிலான அம்மி, உரலின் சிதைந்த பகுதிகள், இரும்புக் கசடுகள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அக்ராகாரங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் 9-ம் நூற்றாண்டுகளில் இங்குள்ள பெருமாள் கோவிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்ட இப்பகுதி குடிகம் நல்லூர் என அழைக்கப்பட்டதாகக் கருதலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story