சளிக்கு சிகிச்சைக்கு சென்ற 1½ வயது குழந்தை சாவு

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது டாக்டர் இல்லாததால் 1½ வயது குழந்தை இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
சளிக்கு சிகிச்சை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த நயனசெருவு பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது28), இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரஜை என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது.
கடந்த ஒரு வருடமாக சளி பிரச்சினையால் குழந்தை அவதிப்பட்டு வந்தது. இதன் காரணமாக நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு மணி அளவில் குழந்தைக்கு இருமல் மற்றும் சளி தொல்லை அதிகமாக ஏற்பட்டுளளது. அதைத்தொடர்ந்து நேற்று காலை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் 5 மணி அளவில் அனுமதித்துள்ளனர்.
குழந்தை சாவு
காலையில் டாக்டர் பணியில் இல்லாத காரணத்தால் அவருடைய ஆலோசனையின் படி செவிலியர் ஒருவர் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை சிறிது நேரம் விளையாடிக் கொண்டு இருந்தது.
அதன் பிறகு வீட்டில் உறங்கிய நிலையில் காலை 10 மணியளவில் திரும்பவும் இருமல் வந்துள்ளது. அதன் பின்னர் குழந்தையை நாடட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது பணியில் இருந்த டாக்டர் குழந்தையை பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
டாக்டர் இல்லை
டாக்டர் பணியில் இல்லாததாலும், செவிலியர் சிகிச்சை அளித்ததாலும் நன்றாக இருந்த குழந்தை திடீரென இறந்து விட்டதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூச்சலிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது மருத்துவமனையில் டாக்டர் இருந்திருந்தால் என்னுடைய குழந்தை உயிருடன் இருந்து இருக்கும் என பெற்றோர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.