பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தை திடீர் சாவு
பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தை திடீர் இறந்தது.
விக்கிரமங்கலம்:
ஆண் குழந்தை
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் தெருவை சேர்ந்தவர் ராஜகுமாரி. இவரது மகள் அருள்செல்வி(வயது 26). இவரை, பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இதையடுத்து கர்ப்பிணியாக இருந்த அருள்செல்வி பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டுக்கு வந்தார். கடந்த 1-ந் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்படவே வீட்டிலேயே அவரது தாய் ராஜகுமாரி, அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
சாவு
இந்நிலையில் தொப்புள் கொடியால் ஏற்பட்ட பிரச்சினையையடுத்து, அருள்செல்வி குழந்தையுடன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ேநற்று முன்தினம் குழந்தைக்கு காது மற்றும் மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அருள்செல்வி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அருள்செல்வி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து அருள்செல்வி கொடுத்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி வழக்குப்பதிவு செய்து, குழந்தை இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே இறந்த குழந்தையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து, அருள்செல்வியிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.