சென்னை தீவுத்திடலில் 3 நாள் உணவு திருவிழா
சென்னை தீவுத்திடலில் சிங்கார சென்னையில் உணவு திருவிழா என்ற 3 நாள் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்த உணவு திருவிழா நாளை வரை நடைபெறுகிறது.
சென்னை.
இந்த 3 நாள் உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 வகையான தோசைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், அரிசி, பருப்பு வகைகள், மசாலாக்கள், இயற்கை முறையில் தயாரித்த எண்ணெய் வகைகள், மீன் உணவுகள், சிறப்பு வாய்ந்த நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் 200 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்வதற்காக அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.
நேற்று தொடங்கிய இந்த உணவு திருவிழா இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
தமிழ்நாடு முதல் இடம்
உணவு திருவிழா தொடக்க விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில் குமார், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வீனா, மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி, வீட்டு வசதி வாரியத்துறை தலைவர் பூச்சி முருகன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, ஆச்சி மசாலா நிர்வாக இயக்குனர் பத்மசிங் ஐசக், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, "உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய தரநிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட 150 மாவட்டங்கள் கலந்து கொண்ட போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 11 மாவட்டங்கள் வெற்றி பெற்று விருதுகளை பெற்றுள்ளன" என்றார்.