சாலையின் மைய தடுப்பு சுவரில் கார் மோதி 3 மாத குழந்தை பலி


சாலையின் மைய தடுப்பு சுவரில் கார் மோதி 3 மாத குழந்தை பலி
x

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பெரம்பலூர் அருகே சாலையின் மைய தடுப்பு சுவரில் கார் மோதியதில் 3 மாத ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும் இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

பெரம்பலூர்

சாமி தரிசனம்

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சோ்ந்தவர் கணேசன் (வயது 32). இவருக்கு பத்மா (32) என்ற மனைவியும், தஷ்வந்த் (4) என்ற மகனும், தக்ஷித் என்ற 3 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். பத்மாவின் குடும்பத்தினரும், அவரது தங்கையும், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஷாம் சுந்தரின் மனைவியுமான மஞ்சு (28) குடும்பத்தினரும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்து விட்டு நேற்று மதியம் சென்னைக்கு மீண்டும் திரும்பினர். காரை கணேசன் ஓட்டினார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலுத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கணேசனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் மைய தடுப்பு சுவரில் மோதி எதிரே உள்ள சாலைக்கு சென்று விபத்துக்குள்ளானது.

ஆண் குழந்தை பலி

இதில் கணேசன், அவரது மனைவி பத்மா, அவர்களுடைய 2 குழந்தைகள், ஷாம் சுந்தர், மஞ்சு, அவர்களுடைய குழந்தைகளான சிவானி (5), சக்தி (2) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசனின் 3 மாத கைக்குழந்தை தக்ஷித் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கணேசன், பத்மா ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஷ்வந்த் மற்றும் ஷாம் சுந்தரின் குடும்பத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைதொடர்ந்து தக்ஷித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story