இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x

ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

உடல் நலக்குறைவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழசெங்கல் மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மனைவி சூர்யா (வயது 30). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. ஜெயச்சந்திரன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் சூர்யா தனது தாயார் வசந்தாவுடன் (50) வசித்து வருகிறார்.

இந்தநிலையில், சூர்யாவின் குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சூர்யா தனது குழந்தையை ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் குழந்தைக்கு சிகிச்சை முடிந்த பிறகு அவர்கள் இருசக்கர வாகனத்தில் தங்களது வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

சங்கிலி பறிப்பு

பொன்னேரி என்ற இடத்தில் வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் சூர்யா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த சூர்யா திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு வருவதற்குள் அந்த ஆசாமிகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story