கோழிக்கழிவு குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு


கோழிக்கழிவு குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு
x

நெகமம் அருகே கோழிக்கழிவு குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே கோழிக்கழிவு குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோழிப்பண்ணை

கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த வெள்ளாளபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு அசாம் மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இதில், அஜய்ராதா (வயது 28) என்பவர், தனது மனைவி ருவிசும்பி ராதாவுடன் (26) தங்கியிருந்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் நெர்சன் ராதா என்ற ஆண் குழந்தை இருந்தது.

குழந்தை சாவு

இந்த நிலையில் நேற்று அஜய்ராதா தனது மனைவியுடன் கோழிப்பண்ணையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை எதிர்பாரத விதமாக கோழிக்கழிவுகளை கொட்டும் குழிக்குள் விழுந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் வேலை முடிந்து வந்த அஜய்ராதா தனது குழந்தையை தேடினார். அப்போது குழிக்குள் குழந்தை பேச்சு மூச்சு இன்றி கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குழந்தையை தூக்கி மேலே கொண்டுவந்தார். தொடர்ந்து அவரை பரிசோதித்தபோது உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதனால் குழந்தையை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

பரிதாபம்

இந்த சம்பவம் குறித்து அறிந்த நெகமம் போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோழிக்கழிவு குழிக்குள் விழுந்த குழந்தை மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தை இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெகமம் பகுதியில் கோழிக்கழிவு கொட்டப்படும் குழிக்குள் 3 வயது குழந்தை விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story