ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு
பெரம்பலூர் முத்துலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லலிதா (வயது 40). இவர் நேற்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள தனது நிலத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணியளவில் வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
பெரம்பலூர் தனியார் கல்லூரியின் மகளிர் விடுதி அருகே சென்ற போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் லலிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
பெண் காயம்
இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லலிதாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவம் அரங்கேறி வருவது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.