வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


ஆண்டிமடம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை டவுசர் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். மேலும், கூரியர் டிரைவர் வீட்டில் இருந்த ரேஷன்கார்டு, வங்கி காசோலையை தண்ணீரில் முக்கி வீசி சென்றனர்.

அரியலூர்

கார் டிரைவர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சிலுவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜசேகரன் (வயது 35), கார் டிரைவர். இவருடைய மனைவி ஜெயா (33). இவர்களுடைய மகள் சுபாஷினி (11). நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ராஜசேகரன் வேலைக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து, ஜெயா தனது மகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட டவுசர் கொள்ளையர்கள் திடீரென ராஜசேகரனின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்தனர்.

சங்கிலி பறிப்பு

பின்னர் அவர்கள் ஜெயா கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட முயன்றார். ஆனால் டவுசர் கொள்ளையர்கள் ஜெயாவின் வாயை பொத்தி 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆவணங்களை தண்ணீரில் முக்கினர்

அப்போது, அதே பகுதியை சேர்ந்த தனியார் கூரியர் டிரைவர் கமலகாந்தன் வீட்டிற்குள் டவுசர் கொள்ளையர்கள் 4 பேரும் புகுந்து சொம்பில் மதுபானத்தை ஊற்றி குடித்துள்ளனர். பின்னர் அந்த சொம்பை வீட்டின் பின்புறம் வீசியுள்ளனர். இந்தநிலையில், வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த டவுசர் கொள்ளையர்கள் வீட்டில் வைத்திருந்த ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், காசோலை உள்ளிட்ட ஆவணங்களை தண்ணீரில் முக்கி வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் அந்த வீடுகளில் பதிவான கைரேகைகளை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டவுசர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story