மயக்கப்பொடியை தூவி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
சின்னசேலம் அருகே மயக்கப்பொடியை தூவி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
சின்னசேலம்
மர்ம நபர்கள்
சின்னசேலம் அடுத்த மேல் நாரியப்பனூர் கிராமம், மேற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி செல்லம்மாள்(வயது 60). இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு கதவை பூட்டாமல் சாத்திவிட்டு தூங்கினர். நேற்று அதிகாலை ஒரு மணியளவில் 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லம்மாளின் முகத்தில் மயக்க பொடியை தூவி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர்.
தப்பி ஓட்டம்
இதனால் திடுக்கிட்ட அவர் கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அருகில் தூங்கிக்கொண்டிருந்த சின்னசாமி ஓடி வந்து அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றார். அப்போது மர்ம நபர்கள் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினா்.பின்னர் அந்த தம்பதியர் நடந்த சம்பவத்தை கிராமமக்களிடம் தெரிவித்தனர். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
வலைவீச்சு
இது பற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு சின்னசாமி, செல்லம்மாளிடம் விசாரணை நடத்தினர். தொடா்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மயக்கப்பொடியை தூவி மூதாட்டியிடம் தாலி செயினை பறித்த மர்ம நபர்களை சிசிடிவி கேமரா பதிவினை கொண்டு தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.