பல்லாவரத்தில் ‌டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி - சுகாதாரத் துறையினர் நோய்த்தடுப்பு பணியில் தீவிரம்


பல்லாவரத்தில் ‌டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி - சுகாதாரத் துறையினர் நோய்த்தடுப்பு பணியில் தீவிரம்
x

பல்லாவரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.

சென்னை

தாம்பரத்தை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ராகஸ்ரீ (வயது 6). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 5-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதில் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 6-ந் தேதி மேல் சிகிச்சைக்காக பள்ளிக்கரணை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதியானதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அறிந்த தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஜமீன் பல்லாவரம் சென்று தொற்று நோய் தடுப்பு சுகாதார பணிகளை முடுக்கி விட்டனர்.

அதிலும் குறிப்பாக சுகாதாரத் துறையினர் நேற்று காலை அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று, டெங்கு கொசு உற்பத்தி உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். வீட்டு வளாகத்தில் கொசு உற்பத்தியாகும் வண்ணம் மழைநீரை தேங்க விடும் விதமாக பழைய டயர், சிரட்டை, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகிய கொசு உற்பத்திக்கான காரணிகளை தீவிரமாக கண்டறிந்து அழித்தனர். அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் கொசு புகை அடிக்கப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. டெங்கு காய்ச்சலால் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story