65 வயது மூதாட்டி கற்பழித்து கொலை
மதுரையில் வீட்டில் தனியாக இருந்த 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்ததாக வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை,
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அம்பேத்கர்நகரை சேர்ந்த 65 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், மகனுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை மூதாட்டியின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு, உடலில் பல இடங்களில் காயங்களுடன், மயங்கிய நிலையில் அவர் கிடந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த பகுதியை சேர்ந்த அர்ஜூன் (31) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு, மதுரை சிலைமான் பகுதியில் 50 வயது பெண் தனியாக இருந்தபோது அவரை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்தது. தற்போது மற்றொரு சம்பவமாக, மூதாட்டியை கற்பழித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.