வீட்டில் தூங்கி கொண்டிருந்த மின் பொறியாளர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


வீட்டில் தூங்கி கொண்டிருந்த மின் பொறியாளர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x

துறைமங்கலத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மின் பொறியாளர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை மர்ம ஆசாமி பறித்து சென்றான். இதேபோல் ஆவின் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது.

பெரம்பலூர்

மின் பொறியாளர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் 9-வது வார்டுக்குட்பட்ட வாசுகி தெருவை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி அனிதாரூபி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். வினோத் கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிமனை போதகராக பணி புரிந்து வருகிறார். அனிதாரூபி பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுக்கையறையில் கட்டிலில் வினோத் தனது மகள், மகனுடன் தூங்கி கொண்டிருந்தார். கடைசி மகனுடன் அனிதாரூபி தரையில் தூங்கி கொண்டிருந்தார்.

7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வினோத் வீட்டிற்கு மர்ம ஆசாமி புகுந்தான். அப்போது வீட்டின் கதவின் அருகே உள்ள ஜன்னல் கதவுகள் திறந்து கிடந்ததால், அதன் வழியாக கையை வீட்டு கதவின் உள்புறமாக போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை திறந்து மர்ம ஆசாமி கதவை திறந்துள்ளார்.

பின்னர் வீட்டினுள் சென்ற மர்ம ஆசாமி பணம் இருக்கிறதா? என்று தேடியுள்ளார். ஆனால் பணம் உள்ளிட்ட ஏதும் கிடைக்காததால் தூங்கி கொண்டிருந்த அனிதாரூபி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். இதனால் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த அனிதாரூபி திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார்.

ரூ.20 ஆயிரம் திருட்டு

இதையடுத்து, வினோத் உடனடியாக எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து மர்ம ஆசாமியை பிடிக்க துரத்தினார். ஆனால் மர்ம ஆசாமி தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி சென்றார். அப்போது வினோத் வீட்டின் அருகே வசிக்கும் ஆவின் நிறுவனத்தின் பெரம்பலூர் கிளையின் மூத்த தொழிற்சாலை உதவியாளர் சந்திரசேகரும் (58) திருடன், திருடன் என்று ஓடி வந்தார். அவரும் தனது வீட்டின் கதவின் அருகே திறந்திருந்த ஜன்னல் கதவு வழியாக மர்ம ஆசாமி கையை விட்டு தாழ்ப்பாளை திறந்து, வீட்டினுள் உள்ளே புகுந்து ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றதாக வினோத்திடம் கூறினார்.

பின்னர் இருவரும் மர்ம ஆசாமியை தேடி சென்றனர். ஆனால் மர்ம ஆசாமி தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் மட்டும் சிறிது தூரத்தில் கிடந்தது. மர்ம ஆசாமி தப்பி ஓடி விட்டார்.

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மர்ம ஆசாமி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளையும், துறைமங்கலம் மூன்று ரோடு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

தப்பி சென்ற மர்ம ஆசாமி முகமூடி அணிந்திருந்தாகவும், கைக்குட்டை கட்டியிருந்ததாகவும், நீல நிற டி-சர்ட்டும், ஜீன்சும் அணிந்திருந்ததாகவும் வினோத் தெரிவித்தார். சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் இல்லாததால், துறைமங்கலம் மெயின் ரோடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை மர்ம ஆசாமி பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி பெண்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

மர்ம ஆசாமி விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் துறைமங்கலத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் நபருடைய வீட்டில் இருந்து திருடி வந்ததாக கூறப்படுகிறது. அந்த நபரும் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று தேடி வந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை அவர் பார்த்த போது தனது மோட்டார் சைக்கிள் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

துறைமங்கலம் கே.கே.நகர், 2-வது குறுக்கு தெரு ராஜா நகரை சேர்ந்த மனோகரனின் மகன் ரீகன் (28). இவர் பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலையில் எழுந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மேலும் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் அதிகாலை 2.40 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவர் ரீகனின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை பெரம்பலூர் போலீசார் பார்வையிட்டு மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

அழகு நிலையத்திலும் ...

பெரம்பலூர் பாலக்கரையில் ஒரு வணிக வளாகத்தின் முதல் தளத்தில் சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த ரகுநாத் (27) என்பவருக்கு சொந்தமான அழகு நிலையம் உள்ளது. இந்த அழகு நிலையத்தின் கழிவறையின் ஜன்னல் கண்ணாடிகளை கழற்றி உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கல்லா பெட்டியில் இருந்த ரூ.13 ஆயிரத்தை திருடி சென்றனர். அந்த மர்ம ஆசாமிகளையும் பெரம்பலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே கும்பலாக இருக்கலாம்

மேற்கண்ட நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பெரம்பலூர் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story