7 வயது சிறுவன் கழுத்தை நெரித்து படுகொலை
சூலூர் அருகே தனியார் மில் வளாகத்தில் 7 வயது சிறுவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டான். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் அருகே தனியார் மில் வளாகத்தில் 7 வயது சிறுவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டான். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் மில்லில் வேலை
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 30). இவருடைய மனைவி கைரொன்னிஷா (28). இவர்களது மகன் கைரல் இஸ்லாம் (7). ஜாகீர் உசேன் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகனுடன் வேலை தேடி கோவை வந்தார்.
அவருக்கு சூலூர் அருகே உள்ள சின்ன கலங்கலில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் அந்த மில் வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து மில்லில் வேலை க்கு சென்று வருகிறார். அதே மில்லில் அவருடைய மனைவிக்கும் வேலை செய்து வருகிறார்.
சிறுவன் உயிரிழப்பு
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். 7 வயதான சிறுவன் கைரல் இஸ்லாம் மட்டும் வீட்டில் இருந்தான். மாலையில் வேலை முடிந்து கணவன்-மனைவி 2 பேரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் மயங்கிய நிலையில் கைரல் இஸ்லாம் கிடந்தான்.
அவனுடைய முகம் மற்றும் கழுத்தில் காயம் இருந்தது. அத்துடன் அதன் அருகே ஒரு பனியனும் கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜாகீர் உசேன் மற்றும் கைரொன்னிஷா ஆகியோர் தங்களது மகனை மீட்டு சிகிச்சைக்காக சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கழுத்தை நெரித்து கொலை
உயிரிழந்த சிறுவனின் கழுத்து மற்றும் முகத்தில் காயம் இருந்தது. மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவன் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுவன் பனியன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் அவனை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை.
தீவிர விசாரணை
சம்பவம் நடந்த பகுதி மில் வளாகம் என்பதால் வெளியே உள்ள நபர்கள் உள்ளே வர வாய்ப்பு இல்லை. எனவே அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.