விமானத்தில் பறந்து வந்து கைவரிசை காட்டும் கொள்ளைக்கும்பல் சிக்கியது


விமானத்தில் பறந்து வந்து கைவரிசை காட்டும் கொள்ளைக்கும்பல் சிக்கியது
x

விமானத்தில் பறந்து வந்து கைவரிசை காட்டும் கொள்ளைக்கும்பல் சிக்கியது

கோயம்புத்தூர்

கோவை, ஜூலை

வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு விமானத்தில் பறந்து வந்து கைவரிசை காட்டுமு் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் 7 பேர் சிக்கினர்.

இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டது:-

திருட்டு, வழிப்பறி சம்பவங்கள்

கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக திருட்டு, செல்போன் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேரி வருவதாக பல்வேறு புகார்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்றன. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் சரக உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது பூமார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் ஒரு முதியவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு தெரியாமல் பணம் மற்றும் செல்போனை லாவகமாக திருடினர்.

இதனை பார்த்த தனிப்படை போலீசார் மெதுவாக அவர்களது அருகில் சென்று 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகதூர் மகடோ (வயது 36), சந்தோஷ் மகடோ (33), பப்லு மகடோ (23) பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22) மற்றும் பீகாரை சேர்ந்த 15 சிறுவன், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

7 பேர் கும்பல்

வடமாநிலங்களை சேர்ந்த 7 பேரும் கொள்ளையடிக்கும் நோக்கில் வாரத்தில் ஒரு நாள் கோவை வந்து காந்திபுரத்தில் அறை எடுத்து தங்கி வந்தனர். இவர்களில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள். 7 பேரும் எங்கு சென்றாலும் கும்பலாக சென்று பல்வேறு இடங்களில் நோட்டமிட்டு வந்தனர். கடைகளுக்கு செல்லும்போது பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கு எது கிடைத்தாலும் திருடிக்கொண்டு செல்வார்கள். அதிலும் குறிப்பாக விஷேச நாட்களில் எங்கு கூட்டம் அதிகம் கூடும் என பார்த்து அங்கு சென்று செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பிக்பாக்கெட், வழிப்பறி செய்யும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் வாரத்தில் 1, 2 நாட்கள் திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட பகுதிகளுக்கும் சென்று கொள்ளையடித்து வந்தனர். கோவையில் காலை நேரத்தில் உழவர் சந்தை, பூமார்க்கெட் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்படும். அங்கு அதிகாலை சென்று செல்போன் மற்றும் பணத்தை திருடி செல்வார்கள்.

விமானத்தில் வந்து கொள்ளை

பின்னர் ரெயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களுக்கு சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த கும்பலில் சேர்ந்த சிலர், கோவை வந்து பணம், செல்போனை கொள்ளையடித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்லும் போது விமானத்திலும், மற்றவர்கள் ரெயிலிலும் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் சுழற்சி முறையில் கோவையில் இருந்து ஒருவர் ஒருவராக விமானத்தில் சென்று வந்துள்ளனர். வட மாநிலத்துக்கு சென்று கொள்ளையடித்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து ஜாலியாக இருந்துவிட்டு, பணம் தீர்ந்ததும் மீண்டும் கோவை வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

4 பேர் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

---


Next Story