விமானத்தில் கோவை வந்த வங்காளதேச வாலிபர் கைது
போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த வங்காளதேச வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் தேசிய கீதம் பாட தெரியாததால் அதிகாரிகளிடம் சிக்கினார்.
போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த வங்காளதேச வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் தேசிய கீதம் பாட தெரியாததால் அதிகாரிகளிடம் சிக்கினார்.
விமானம்
ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது.
அதில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியேற்ற துறை அதிகாரிகள் சரி பார்த்தனர்.
அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர்.
இதில் அவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று குறிப் பிடப்பட்டு இருந்தது.
தேசிய கீதம்
இதனால் அவரிடம் ஷார்ஜாவில் இருந்து கொல்கத்தா செல்ல மல் எதற்காக கோவை விமான நிலையம் வந்தீர்கள்?. குடும்பத்தினர் எங்கு உள்ளனர் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பயணியிடம் இந்திய தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால் அவருக்கு தேசிய கீதத்தில் சில வார்த்தைகள் கூட தெரிய வில்லை.
இதைய டுத்து அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் போலி ஆவணங்கள் கொடுத்து இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆதார் எண் பெற்றார்
அவர்களின் தொடர் விசாரணையில், அன்வர் உசேன், 2018-ம் ஆண்டு திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து உள்ளார்.
அப்போது அவர் பெங்களூருவில் போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்து, மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா முகவரியில் ஆதார் எண் பெற்றுள்ளார்.
பின்னர் இந்த ஆவணங்களை பயன்படுத்தி கடந்த 2020-ம் ஆண்டு இந்திய பாஸ்போர்டை பெற்றார். பின்னர் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.
வேலை தேடி வந்தார்
இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி அவர் வேலை தேடி ஷார்ஜா வில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்த போது அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து குடியேற்ற துறை அதிகாரிகள், அன்வர் உசேனை கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அன்வர் உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.