வாரச்சந்தை நடத்தும் இடத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு


வாரச்சந்தை நடத்தும் இடத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
x

கணபதி அருகே வாரச்சந்தை நடத்தும் இடத்தில் வைக்கப்பட்ட திடீர் பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோயம்புத்தூர்

கணபதி

கணபதி அருகே வாரச்சந்தை நடத்தும் இடத்தில் வைக்கப்பட்ட திடீர் பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திடீர் பேனரால் பரபரப்பு

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி மேயரின் கணவர் ஆனந்தகுமார் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. இதில் வாரச்சந்தை அமைக்கும் கடைக்காரர்களிடம் பணம் வசூல் செய்வது தொடர்பாக பேசப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேயரின் கணவர் குறிப்பிட்ட இடத்தில் நேற்று காலை இந்த இடம் அரசுக்கு சொந்தமானது, அனுமதியின்றி யாரும் உள்ளே வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் பெயரில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் வாரச்சந்தை கடைகள் அமைக்க வந்த வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் பா.ஜனதாவினரும் அங்கு குவிந்தனர். இதனை அறிந்த சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சின்னேவடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரேம், சரவணம்பட்டி வருவாய் ஆய்வாளர் கீதாராணி ஆகியோர் அங்கு வந்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் மாவட்ட நிர்வாகமோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ இந்த அறிவிப்பு பேனரை வைக்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பேனர் உடனடியாக அகற்றப்பட்டது. வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்வது தொடர்பான பிரச்சினையில் இந்த பேனர் வைக்கப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகளிடம் பேசி முடிவு

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கணபதி அருகே மணியகாரம்பாளையத்தை அடுத்த சுப்பநாயக்கன்புதூரில் உள்ளது கால்நடைத்துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலம். இந்த நிலத்தின் ஒரு பகுதியில் மண்ணைகொட்டி சமன்படுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக வியாபாரிகள் வாரச்சந்தை நடத்தி வருகின்றனர். இந்த இடத்தில் நேற்று காலை மாவட்ட நிர்வாகம் பெயரில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதனை மாவட்ட நிர்வாகம் வைக்கவில்லை. பேனர் யார் வைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

வியாபாரிகள் கொண்டு வந்த காய்கறிகள் அழுகும் நிலை உள்ளது இந்த வாரம் மட்டும் சந்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் வியாபாரிகள் கால்நடைத்துறை அதிகாரிகளிடம் பேசி, இந்த இடத்தில் வாரச்சந்தை நடத்துவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story