தேனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை, அலுவலக அறைக்குள் புகுந்து இளநிலை உதவியாளர் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது. இங்கு போடியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி (வயது 50) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இன்று பகலில் இவர் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது போடியை சேர்ந்த உமாசங்கர் (56) வந்தார். அவர் ராஜராஜேஸ்வரியின் அறைக்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு தலை, கை, கண்ணம் ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அலுவலக ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள், உமாசங்கரை தடுத்து, அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரின் காரில், ராஜராஜேஸ்வரியை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் உமாசங்கரை ஊழியர்கள் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த அறை மற்றும் அலுவலக வளாகம் முழுவதும் ரத்தம் உரைந்து கிடந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தெரியவந்தது.
உமாசங்கர் தற்போது ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தேனியில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார்.
இதே அலுவலகத்தில் ராஜராஜேஸ்வரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றினார். பின்னர் அவர் திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மீண்டும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேனியில் பணியாற்றி வருகிறார்.
2015-ம் ஆண்டு உமாசங்கர் பணியாற்றிய போது துறைவாரி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவருக்கு விளக்கம் கேட்டு 17'பி' நோட்டீஸ் வழங்கினார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்டத்துக்கு பணி இடமாற்றமும் செய்யப்பட்டார்.
இதனால் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை மனதில் வைத்தும் உமாசங்கர் இன்று தகராறு செய்து, அரிவாளால் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.