வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு


வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அருண்ராஜ் (வயது 24). பட்டதாரியான இவர் நேற்று இரவு ஏழரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சீர்காழி நகருக்கு வந்துள்ளார். அப்போது பிடாரி வடக்கு வீதியில் வரும்பொழுது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அருண்ராஜை இரும்பு கம்பியால் தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. இந்த தாக்குதலில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அருண்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அருண்ராஜ் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சீர்காழி நகர் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story