திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் 39 மதகுகளுடன் தடுப்பணை


திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் 39 மதகுகளுடன் தடுப்பணை
x

திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் 39 மதகுகளுடன் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு;

திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் 39 மதகுகளுடன் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வெள்ளப்பள்ளம் உப்பனாறு

சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் வெள்ளப்பள்ளம் உப்பனாறு செல்கிறது. இந்த ஆறு ஆதமங்கலம், வைத்தீஸ்வரன் கோவில், பனைமங்கலம், சட்டநாதபுரம், வெள்ளப்பள்ளம், புதுத்துறை, திருநகரி வழியாக திருமுல்லைவாசல் கடலில் கலக்கிறது.இந்த ஆறு மழை காலங்களில் வெள்ள நீர் வடியும் வடிகாலாகவும், ஆயிரக்கணக்கான விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் விளங்குகிறது. கோடைகாலங்களில் இந்த ஆற்றின் வழியாக உப்பு நீர் சீர்காழி வரை உட்புகுந்து விடுகிறது. இதனால் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உவர்தன்மை கொண்டதாகவும், பாசன வசதிக்கு பயனற்றதாக காணப்பட்டது.

தடுப்பணை

இதைத்தொடர்ந்து திருநகரியில் தடுப்பணை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் நலன் கருதி திருநகரி பகுதியில் உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி என அழைக்கப்படும் தடுப்பணை அமைக்க ரூபாய் 30 கோடியை ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு திருநகரியில் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கியது.

39 மதகுகள்

கடந்த ஆண்டு தடுப்பணை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது.இதைத்தொடா்ந்து தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த தடுப்பணையால் வருகிற மழைக்காலத்தில் உபரி நீரை தேக்கவும், கடல் நீர் உட்பகுவதை தடுக்க வசதியாக இருக்கும் என விவசாயிகள் கூறினர். இந்த அணை ஆற்றின் குறுக்கே 240 மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ் இதில் 39 மதகுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த மதகு ஷட்டர்களை இயக்க தானியங்கி கருவி, ஜெனரேட்டர் வசதி உள்ளிட்டவைகள் அடங்கிய தனி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையில் கீழ் மற்றும் மேல் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் முற்றிலும் நவீன முறையில் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்கள் ஏலம்

மேலும் இந்த அணையில் மீன்கள் உற்பத்தி அதிகரிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மீன்களை ஏலம் விடுவதன் மூலம் ஆண்டுதோறும் ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைக்கும். இந்த தடுப்பணியால் ஏராளமான விளைநிலங்கள் குறுவை சாகுபடியில் ஈடுபட வசதியாக இருக்கும். இந்த தடுப்பணை கட்டும் பணியை பொதுப்பணித்துறையினர் தினந்தோறும் கண்காணித்து வந்ததால் பணிகளை வரைந்து முடிக்க வசதியாக இருந்தது.

கரைகள்

இது குறித்து திருநகரி ஊராட்சி தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:- திருநகரி மற்றும் அதை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் சுமார் 50 ஆண்டுகால கோரிக்கையின் பயனாக உப்பனாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பணையில் தற்போது கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு மட்டுமே கரைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் திருநகரி- எடமணல் பாலத்தின் அருகே உள்ள ஆற்றங்கரை தெரு வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்துக்கு கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story