பர்லியார் குடியிருப்பு பகுதியில் தொடர் மழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
பர்லியார் குடியிருப்பு பகுதியில் தொடர் மழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. வீடுகள் சேதம் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
குன்னூர்
பர்லியார் குடியிருப்பு பகுதியில் தொடர் மழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. வீடுகள் சேதம் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
மழை
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். பர்லியார் குடியிருப்பு பகுதி பர்லியார் ஊராட்சியின் 9-வது வார்டிற்கு உட்பட்டது ஆகும். இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்து இருந்தனர். இதில் மழை காலங்களில் வீடுகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இதன்படி ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது. தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
இந்த மழையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்ததால் பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பின்புறம் கற்கள் மற்றும் மண் விழுந்து உள்ளது. எதிர்வரும் நாட்களில் குன்னூர் பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் மழைத் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. இதனால் வீடுகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்புசுவர் கட்டி 10 நாட்கள் ஆன நிலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தரமற்ற கட்டுமான பணியே இடிந்து விழ காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் தடுப்புச்சுவர் விரைவில் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.