தேயிலை தோட்ட அதிகாரியை கரடி தாக்கியதால் பரபரப்பு


தேயிலை தோட்ட அதிகாரியை கரடி தாக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே தேயிலை தோட்ட அதிகாரியை கரடி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே தேயிலை தோட்ட அதிகாரியை கரடி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரடி தாக்கியது

வால்பாறை அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் உதவி அதிகாரியாக பணியாற்றி வருபவர் முத்துக்குமார்(வயது 29). இவர் நேற்று காலை 9.30 மணியளவில் 12-ம் ெநம்பர் தேயிலை தோட்ட பகுதியில் செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டவர்களை கண்காணித்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த கரடி ஒன்று திடீரென முத்துக்குமார் மீது பாய்ந்து தாக்கியது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி மறைந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சக அதிகாரிகள் முத்துக்குமாரை மீட்டு எஸ்டேட் தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் முத்துக்குமாருக்கு, வனச்சரகர்கள் வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

அத்திப்பழ சீசன்

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வால்பாறை பகுதியில் அத்திப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தேயிலை தோட்ட பகுதியில் உள்ள அத்தி மரங்களில் இருந்து விழக்கூடிய பழங்களை தின்பதற்கு கரடிகள் நடமாடி வருகிறது. எனவே அந்தந்த எஸ்டேட் நிர்வாகத்தினர் ஏதாவது வனவிலங்குகள் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே தேயிலை தோட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றனர்.

தேயிலை தோட்ட அதிகாரியை கரடி தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story