சாலையில் உலா வந்த கரடி
சாலையில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையத்திற்கு பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை உள்ளது. இங்குள்ள பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், அங்குள்ள தேயிலை தோட்டங்கள், சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரடி ஒன்று அந்த சாலையில் உலா வந்தது. இந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கருஞ்சிறுத்தைகள், சிறுத்தைகள், காட்டெருமை, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.