குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி; பொதுமக்கள் அச்சம்
குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோத்தகிரி: கோத்தகிரி நகரின் மையப்பகுதிகளான பஸ்நிலையம், கடைவீதி, காம்பாய் கடை, மாதா கோவில் சாலை, கார்சிலி, கன்னிகா தேவி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம்ள தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 3 மணியளவில் கோத்தகிரி கடைவீதி அருகே சுமார் 200 குடும்பங்கள் வசித்து வரும் பாப்திஸ்து காலனி குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சாலையில் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தது. கரடியை கண்டதும் நாய்கள் குறைத்தபடி துரத்தி சென்றன. இதனால் கரடி, நாய்களை எதிர்த்து நின்றதோடு, சத்தம் போட்டுக்கொண்டே அங்கிருந்த புதர் மறைவில் சென்றது. இதற்கிடையே கரடி சாலையில் நடந்து வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி சென்று தங்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் பகல் மற்றும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கரடி தொடர்ந்து உலா வருவதால் அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.