கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் உலா வந்த கரடி
கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் கரடி உலா வந்தது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சமீப காலமாக யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இதேபோல் மலைப்பாதையில் வனவிலங்குகள் உலா வருவதையும் அங்கு அடிக்கடி பார்க்கலாம்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திண்டுக்கல்லில் இருந்து தாண்டிக்குடி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சித்தரேவு, பெரும்பாறையை கடந்து தாண்டிக்குடி அருகே பண்ணைக்காடு மலைப்பாதையில் உள்ள எதிரொலிக்கும்பாறை பகுதியில் சென்றது. அப்போது பஸ்சுக்கு முன்னால் சாலையில் கரடி ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. இதனை பார்த்த பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைத்தனர். மேலும் கரடிக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கினார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் சிலர், மலைப்பாதையில் நடந்து சென்ற கரடியை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
வீடியோ வைரல்
சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் நடந்து சென்ற அந்த கரடி, அருகில் இருந்த தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு அந்த தனியார் பஸ் வழக்கமான வேகத்தில் சென்றது.
மலைப்பாதையில் கரடி உலா வந்த சம்பவம் தாண்டிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே மலைப்பாதையில் கரடி உலா வந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.