தி.மு.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி உருவாகும்


தி.மு.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி உருவாகும்
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி உருவாகும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை

தெளிவான முடிவு

புதுக்கோட்டையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

60 மாதங்களில் வர வேண்டிய அவநம்பிக்கை என்பது தி.மு.க. ஆட்சியின் மீது 20 மாதங்களிலேயே வந்துவிட்டது. இந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது. சென்னையில் கிரிக்கெட் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம், சபரீசன் சந்திப்பு என்பது சகஜமான சந்திப்பாக தான் நான் பார்க்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் நீங்களும் எங்களோடு கூட்டணிக்கு வர வேண்டும் என டெல்லியை சேர்ந்த நலன் விரும்பிகள் கூறினர். வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்படும். அப்போது அந்த நலன்விரும்பிகள் யார்? என்று தெளிவாக தெரியவரும். தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க.வை தீயவர்களின் கையில் இருந்து விடுவித்தால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்று சேரலாம். அந்த காலம் விரைவில் வரலாம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காலம் தாழ்த்துவது இந்த ஆட்சியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சிவகங்கை தொகுதியில் போட்டியா?

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போவதாக செய்தி பரவுகிறது. நான் தேர்தலில் நிற்பதை பற்றி முடிவு எடுக்கவில்லை. தேர்தலில் நிற்கும் போது அறிவிப்பேன். என்னால் பலன் அடைந்தவர்கள் என்னை விட்டு சென்றாலும், என்னுடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வின் அடிப்படை விதியை மாற்றி துரோகத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி இருக்கிறார். உப்பை தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அதற்கான காலம் வரும். இதனை அ.ம.மு.க. நிறைவேற்றிக்காட்டும். எனது மடியில் கனமில்லை. யாரோடும் சமரசம் செய்யாமல் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை அ.ம.மு.க. கொண்டு வரும்.

பெரிய கூட்டணி உருவாகும்

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டதாக கூறப்படுவது பொய் பிரசாரம். தி.மு.க. ஆட்சி நடத்துவதால் திராவிட மாடல் என்பது கிடையாது என கவர்னர் கூறுகிறார் என்று நான் கருதுகிறேன். இது திராவிட நாடு. தி.மு.க. தனது ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்வதற்கு பதிலாக கருணாநிதி மாடல், தி.மு.க. மாடல் ஆட்சி என்று கூற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story