கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை சாவு
கோத்தகிரியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழந்தது.
கோத்தகிரி
கோத்தகிரியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழந்தது.
கழிவுநீர் தொட்டி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள், தேயிலை தோட்டங்கள், சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் கோத்தகிரி கடைவீதி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த சுமார் 15 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டிக்குள் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து கிடந்தது. அது தொட்டியில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து உயிருக்கு போராடியது.
காட்டெருமை சாவு
அதன் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமையை மீட்க போராடினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் காட்டெருமையை இறந்த நிலையில்தான் மீட்க முடிந்தது. பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, காட்டெருமையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் அதே தனியாருக்கு சொந்தமான மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் 2 வயதுடைய காட்டெருமை தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், மூடப்படாத கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளில் சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் தவறி விழுந்து உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. அவற்றை உரிய முறையில் மூடி வைக்க அறிவுறுத்த வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.