ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி
விக்கிரவாண்டி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி பரிதாபமாக இறந்தனர். உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விக்கிரவாண்டி
உறவினரின் திருமண நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் அய்யப்பன்(வயது 10). சுரேஷ் மும்பையில் குடும்பத்துடன் தங்கி டிரைவராக வேலை செய்து வருகிறார். அய்யப்பன் மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இதேபோல் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிமேகலை மகள் தனுஸ்ரீ(9). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் விக்கிரவாண்டி அடுத்த எசாலம் கிராமத்தில் உள்ள உறவினர் தாமோதரன் என்பவரின் வீட்டில் நாளை(வெள்ளிக்கிழமை) திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அய்யப்பன், தனுஸ்ரீ குடும்பத்தினர் எசாலம் கிராமத்திற்கு வந்தனர்.
ஏரியில் குளிப்பதற்காக...
இந்த நிலையில் நேற்று காலை திருமண வீட்டில் இருந்த பெரியவர்கள் திருமண முன் ஏற்பாட்டுக்காக பாத்திரம் வாங்க விழுப்புரம் சென்றனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த அய்யப்பன், தனுஸ்ரீ மற்றும் தாமோதரனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த குகநாதன் மகள் கோடீஸ்வரி(9) ஆகிய 3 பேரும் எசாலம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது அய்யப்பன், தனுஸ்ரீ ஆகிய இருவரும் ஏரியில் உள்ள மதகு பகுதியிலும், கோடீஸ்வரி ஏரிக்கரையில் நின்றும் குளித்து கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக அய்யப்பன், தனுஸ்ரீ இருவரும் மதகு பகுதியில் உள்ள சேற்றில் சிக்கி நீரில் தத்தளித்தனர்.
நீரில் மூழ்கி பலி
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து கரையில் நின்ற கோடீஸ்வரி கூச்சல் எழுப்பினாள். இந்த சத்தம் கேட்டு அருகில் தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அய்யப்பன், தனுஸ்ரீ இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். பின்னர் இருவரின் உடல்களையும் தொழிலாளர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதைப்பார்த்து சிறுவர், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பெரியதச்சூர் போலீசார் அய்யப்பன், தனுஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சரத்யாதவ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோகத்தில் மூழ்கியது
மாணவி தனுஸ்ரீயின் தந்தை பெருமாள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனது ஒரே மகள் தனுஸ்ரீயை மணிமேகலை கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி தனுஸ்ரீ பலியானதால் தனக்கு ஆதரவாக இருந்த மகளையும் மணிமேகலை இழந்து விட்டார்.
உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் ஏாியில் குளிக்கச்சென்ற சிறுவன், சிறுமி இருவரும் நீரில் மூழ்கி பலியான சம்பவத்தால் கலகலப்பாக இருந்த திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.