பயணிகள் நிழற்குடை கட்ட தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் சாவு


பயணிகள் நிழற்குடை கட்ட தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் சாவு
x

பயணிகள் நிழற்குடை கட்ட தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புதுவெண்ணெய்க்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. விவசாயி. இவரது மகன் வினோத்குமார் (வயது 11). 4-ம் வகுப்பு வரை படித்த இவன் தற்போது பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தான்.

விஜயமாநகரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. தற்போது பெய்த மழையின் காரணமாக, இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

தவறி விழுந்த சிறுவன்

நேற்று மாலை, சிறுவன் வினோத்குமார், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக அவன், அங்கிருந்த ஒரு பள்ளத்துக்குள் தவறி விழுந்து விட்டான்.

இதில் தண்ணீரில் மூழ்கிய அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றி அவனது பெற்றோர் அங்கு பதறியடித்து ஓடிவந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சாலை மறியல்

இந்நிலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும், பணியை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டதே, சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story