மாட்டுவண்டி டயர் தலையில் ஏறியதில் சிறுவன் சாவு
மாட்டுவண்டி டயர் தலையில் ஏறியதில் சிறுவன் சாவு
சுவாமிமலை அருகே மாட்டுவண்டி டயர் தலையில் ஏறியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
மணல் எடுக்க...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் அண்ணலக்ரஹாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் செழியன். கொத்தனார். இவரது மகன் நவீன்(வயது14) 8-ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தான்.
நேற்று காலை நவீன் தனது உறவினர் மாட்டு வண்டியில், குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் உள்ள குவாரிக்கு மணல் எடுப்பதற்காக சென்றான்.
மாட்டுவண்டி டயர் ஏறி சாவு
அங்கு சென்ற பின்னர் நவீன் தனது வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக கொட்டையூர் புறவழிச்சாலையில் மணல் ஏற்றி வந்த மாத்திகேட்டை பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மாட்டு வண்டியில் ஏறினான்.
அப்போது நிலைதடுமாறி நவீன் கீழே விழுந்தான். மாட்டுவண்டி டயர் அவன் தலையில் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நவீன் பரிதாபமாக இறந்தான்.
கைது
இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டியை ஓட்டி வந்த தொழிலாளி பாலசந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டுவண்டி டயர் தலையில் ஏறியதில் சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.