வயல்வெளியில் பிணமாக கிடந்த சிறுவன்
நெமிலி அருகே நண்பர்களுடன் சென்ற சிறுவன், வயல்வெளியில் நெற்பயிருக்கு நடுவில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தான். அவனை யாரும் கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி
நெமிலி அருகே நண்பர்களுடன் சென்ற சிறுவன், வயல்வெளியில் நெற்பயிருக்கு நடுவில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தான்.
அவனை யாரும் கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களுடன் சென்றான்
நெமிலியை அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் புதிய காலனி குறுக்கு தெருவில் வசித்துவருபவர் காளிதாசன், விவசாய கூலி வேலை செய்துவருகிறார்.
இவரது மனைவி பபிதா. இந்த தம்பதிக்கு அவினாஷ் (வயது 4) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு.
அவினாஷ் பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்தான். இந்தநிலையில் இன்று மதியம் சிறுவன் வீட்டில் உள்ளவர்களிடம், நண்பர்களுடன் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
நிர்வாண நிலையில் பிணம்
ஆனால் சிறுவன் கிடைக்க வில்லை. அதைத்தொடர்ந்து அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் தேடியும் கிடைக்கவில்லை.
பின்பு தேடுதலை தீவிரப்படுத்தியபோது அங்குள்ள வயல்வெளியில் நெற்பயிர்களுக்கு நடுவில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் நெமிலி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுவன் நீரில் மூழ்கி இறந்தானா?, அல்லது யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.