கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர்


புதுக்கோட்டை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் சாவில் சந்தேகம் என புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கிணற்றில் பிணம்

புதுக்கோட்டை அருகே இடையன்வயல் கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் பார்த்தசாரதி (வயது 18). இவர் நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்றிருந்தார். இந்த நிலையில் ஆடுகள் மாலை வீடு திரும்பிய நிலையில் பார்த்தசாரதியை மட்டும் காணவில்லை. அவரை பெற்றோர், உறவினர்கள் தேடிய போது, தோப்புக்கொல்லை அகதிகள் முகாம் அருகே உள்ள ஒரு தனிநபரின் தோட்டத்தில் கிணற்றின் கரையில் பார்த்தசாரதியின் உடைகள் மற்றும் செல்போன் மட்டும் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து வல்லாத்திராக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கேமராவை கிணற்றில் செலுத்தி பார்வையிட்ட போது பார்த்தசாரதி பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து பார்த்தசாரதியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர் நிர்வாண நிலையில் பிணமாக காணப்பட்டார்.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று பார்த்தசாரதியின் உடல் பிரேத பரிசோதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் நடந்து முடிந்தது.

இதற்கிடையில் பார்த்தசாரதியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், நிர்வாண நிலையில் அவர் பிணமாக கிடந்ததால், அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் எனவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே அவரது உறவினர்கள், குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இறந்த பார்த்தசாரதியின் உடலை பெற்று சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. அதன்பின் நிலைமை சீரானது.


Next Story