வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுவன் படுகாயம்
வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுவன் படுகாயம்
வால்பாறை
வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.
சிறுவனை தாக்கியது
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பேப்பையா. இவருடைய மனைவி கீதா தேவயான். இவர்களுடைய மகன் ஆகாஷ் (வயது 5). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்து உள்ளார்கள். பின்னர் அந்தப்பகுதியில் தங்கிய கணவன்-மனைவி 2 பேரும் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். நேற்று விடுமுறை என்பதால் தனது மகன் ஆகாஷ் உடன் பெற்றோர் இருவரும் அருகில் உள்ள நீரோடை பகுதிக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது சிறுவன் ஆகாஷ் விளையாடிக் கொண்டு இருந்தான்.
அப்போது தேயிலை தோட்ட பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று ஆகாஷ் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதைப் பார்த்த பேப்பையா கூச்சலிட்டு கல் எடுத்து எறிந்து வீசி சிறுத்தையை துரத்தியுள்ளார்.
வனத்துறையினர் கண்காணிப்பு
இதனால் சிறுத்தை ஆகாசை விட்டு விட்டு தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்துள்ளது. சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இதையடுத்து அவனை அந்தப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பன்னிமேடு எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளான்.
பட்டப்பகலில் தாய் -தந்தை கண்முன்னே சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் நடந்தவைகள் குறித்து கேட்டறிந்து பன்னிமேடு சங்கிலி ரோடு தேயிலை தோட்ட பகுதியில் கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.