சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு
நெமிலி அருகே சுத்தியலால் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
சுத்தியலால் தாக்கி கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளம்மாள் (வயது 98). இவரது பேத்தி செல்வி (45). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது பாட்டி குள்ளம்மாள் மற்றும் அவரது உறவினர் கார்த்திகேயன் என்பவரின் மகன் வேல்முருகன் (2) ஆகிய இருவரையும் திடீரென சுத்தியால் தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் குள்ளம்மாள் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார்.
சிறுவன் சாவு
இதைத்தொடர்ந்து சிறுவன் வேல்முருகன் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தான். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வியை அயனாவரம் மனநல காப்பகத்தில் அனுமதித்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.