கத்திக்குத்தில் காயம் அடைந்த பெண்ணின் பெரியப்பா சாவு
பாணாவரம் அருகே குடும்ப தகராறில் கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் பெரியப்பா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் மோதல்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தை ேசர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவருக்கும் பழையபாளையம் கிராமத்தை ேசர்ந்த யுவஸ்ரீ (23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த பல மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் யுவஸ்ரீ அவரது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு மணிகண்டன் தன் குடும்பத்தினருடன் பழையபாளையத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
அப்போது 2 குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
கொலை வழக்குப்பதிவு
அப்போது மணிகண்டன் தந்தை சுந்தரம் என்பவர் யுவஸ்ரீயின் பெரியப்பா அண்ணாதுரையை (55) மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் சுந்தரமும் தாக்கப்பட்டதில் அவரும் காயம் அடைந்தார்.
இதையடுத்து இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வெவ்வேறு வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.