கிணற்றுக்குள் செத்துக்கிடந்த பூனையை எடுக்கச்சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி சாவு
கிணற்றுக்குள் செத்துக்கிடந்த பூனையை மீட்கச்சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
சென்னிமலை
கிணற்றுக்குள் செத்துக்கிடந்த பூனையை மீட்கச்சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கிணற்றுக்குள் செத்துக்கிடந்த பூனை
சென்னிமலை அருகே உள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ஆனந்த் (வயது 35). இவர் சென்னிமலையில் தங்கிக்கொண்டு, அங்குள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில், தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆனந்த் தங்கியிருந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் பூனை ெசத்துக்கிடந்தது. அதை எடுப்பதற்காக ஆனந்த் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். பின்னர் பூனையை எடுத்துக்கொண்டு கயிற்றை பிடித்தபடி மேலே ஏறிய போது கை நழுவி ஆனந்த் கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
நீச்சல் தெரியாததால்...
ஆனந்துக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் விழுந்த உடன் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பியபடி மூழ்க தொடங்கினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனே சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி ஆனந்தை மீட்டனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.