விழுப்புரம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் மாற்று பேருந்து வராததால் பயணிகள் புலம்பல்
விழுப்புரம் அருகே நடுரோட்டில் அரசு டவுன் பஸ் பழுதாகி நின்றது. இதனால் மாற்று பேருந்து வராததால் பயணிகள் அவதிப்பட்டனா்.
விழுப்புரத்தில் இருந்து நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இவர்களில் பெண்கள், கட்டணமின்றி அரசு சலுகையில் இலவசமாக பயணித்தனர். இந்த பஸ், விழுப்புரம் அருகே கோலியனூர் ரெயில்வே கேட்டை கடந்து சென்ற போது திடீரென ரேடியேட்டர் பழுது காரணமாக பஸ் இயக்கப்படாமல் நடுரோட்டிலேயே நின்றுவிட்டது.
இதனால் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். பஸ்சில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரிசெய்ய முடியாததால் அதன் டிரைவர், கண்டக்டரிடம் மாற்று பஸ்சை வரவழைக்கும்படியும் அல்லது அவ்வழியாக செல்லும் பஸ்களில் இலவசமாக அனுப்பி வைக்கும்படியும் பயணிகள் முறையிட்டனர். அதற்கு கட்டணமின்றி இலவசமாக அனுப்பி வைக்க முடியாது என்றும் கட்டணம் செலுத்தி வேண்டுமானால் செல்லுங்கள் என கண்டக்டர் கூறியதாக தெரிகிறது.
மேலும் இதுபற்றி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாற்று டவுன் பஸ் அங்கு வருவதற்கு மிகவும் காலதாமதமானது. அதுவரை குழந்தைகளுடன் வெகுநேரம் காத்திருந்த பயணிகள், வேறு வழியின்றி கட்டணம் செலுத்தி அவ்வழியாக வந்த பஸ்களில் பயணம் செய்தனர். இலவச பஸ்சை நம்பி வந்தால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்று பயணிகள் சிலர் புலம்பியபடி சென்றனர். பஸ் பழுதாகி நடுரோட்டில் நிற்பதையும், பயணிகள் காத்திருப்பதையும் அவ்வழியாக சென்ற சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். அது தற்போது வைரலாகி வருகிறது.