கிராம மக்களை அச்சுறுத்தும் பழுதடைந்த நீர்த்தேக்கதொட்டி


கிராம மக்களை அச்சுறுத்தும் பழுதடைந்த நீர்த்தேக்கதொட்டி
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சோழம்பட்டு ஊராட்சியில் கிராம மக்களை அச்சுறுத்தும் பழுதடைந்த நீர்த்தேக்கதொட்டி இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

தமிழகம் முழுவதும் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஏதோ பள்ளிக்கல்வித்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள் மட்டும் பழுதடைந்து காணப்படுவதில்லை. வருவாய், ஊரகவளர்ச்சித்துறை உள்ளிட்ட பிறதுறைகளுக்கு சொந்தமான கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் போதிய பராமரிப்பு இன்றி பாழடைந்தும், இடிந்து விழும் அபாய நிலையிலும் இருப்பதை காண முடிகிறது.

அந்த வகையில் சங்கராபுரம் அருகே சோழம்பட்டு ஊராட்சி உள்ளது. இங்கு 4 மற்றும் 4-வது வார்டுகளில் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 35 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள முருகன் கோவில் அருகே ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் அந்த தொட்டியில் நீரேற்றி அப்பகுதி மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து உள்ளது. தொட்டியின் மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் கறைகள் படிந்து பொலிவிழிந்து காணப்படுகிறது. நீர்த்தேக்க தொட்டியை தாங்கி பிடித்து நிற்கும் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இவ்வாறு நாட்கள் செல்ல செல்ல சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு அதற்கு பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டியை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தாகம் தணித்து வரும் இந்த தொட்டி தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இப்ப விழவோ, எப்ப விழவோ என்று அச்சுறுத்தி வருகிறது. நீர்த்தேக்க தொட்டியை கடந்து தான் தனியார் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். மேலும் கூட்டுறவு சங்கம், ரேஷன் கடைக்கும் பொதுமக்கள் இந்த வழியாகத்தான் சென்று வருவதால் குடிநீர் தேக்க தொட்டி வழியாக செல்ல மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். விபத்து நிகழ்வதற்கு முன் மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. இதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் பழுதடைந்து நிற்கும் நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், ஒன்றிய அலுவலகத்துக்கும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபரீதம் நிகழ்ந்த பின்னர் நிவாரண உதவி, புதிய நீர்த்தேக்க தொட்டி என உதவி செய்வதை தவிர்த்து விபத்து நிகழ்வதற்கு முன்னதாக பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story