புதர்கள் சூழ்ந்த பயணிகள் நிழற்குடை
கரப்பாடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடையை புதர்கள் சூழ்ந்து உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெகமம்,
கரப்பாடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடையை புதர்கள் சூழ்ந்து உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் நிழற்குடை
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஏ.நாகூர் ஊராட்சியில் உள்ள கரப்பாடி கிராமத்தில் இருந்து பூசாரிபட்டி செல்லும் சாலையில் கடந்த 2010-2011-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.85 ஆயிரம் செலவில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த வழியாக உடுமலை, தாராபுரம், பழனி, பொள்ளாச்சி, நெகமம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன.
இதனால் சுற்றுப்புற கிராம மக்கள் அந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பதோடு, மழைக்காலங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பயணிகள் நிழற்குடையில் ஒதுங்கி நிற்கின்றனர். தற்போது நிழற்குடை பராமரிப்பு இன்றி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அமரவும், உள்ளே காத்திருக்கவும் முடியாமல் உள்ளனர்.
அகற்ற வேண்டும்
இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அவதியடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது, ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததாலும், பயன்படுத்தாமல் விட்டதாலும் பயணிகள் நிழற்குடையை புதர்கள் சூழ்ந்தன.
தற்போது புதர்கள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்த புதர்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும், பயணிகள் நிழற்குடையை முட்புதர்கள் சூழ்ந்து உள்ளன. இந்த புதர்களை அகற்றி, நிழற்குடை முழுவதும் வர்ணம் பூச வேண்டும். மேலும் கரப்பாடி கிராமத்தில் நாள் முழுவதும் பகலில் தெருவிளக்குகள் எரிந்தபடியே உள்ளது. புதர் மண்டி உள்ள நிழற்குடை அருகில் உள்ள மின் கம்பத்திலும் பகல் நேரத்தில் தெருவிளக்கு எரிந்து கொண்டே உள்ளது. அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.