திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்

தூத்துக்குடி-சென்னை கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
தூத்துக்குடி-சென்னை கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலை உள்ளது. திருத்துறைப்பூண்டி, பள்ளங் கோயில், மேட்டுப்பாளையம், கடியாச்சேரி, விளக்குடி, ராயநல்லூர், திருப்பத்தூர், கோட்டூர், வழியாக மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கோவை, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது.
மேலும் இந்த பாதையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டுவதுடன், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.இதனால் பல மணி நேரம் வீணாகிறது.
புறவழிச்சாலை
இதை கருத்தில் கொண்டு திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், புறவழிச்சாலை அமைத்து தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், செல்லும் வாகனங்கள் இந்த புறவழிச்சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்க வாய்ப்பு இல்லை.
ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மன்னார்குடியில் இருந்து வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் செல்ல புறவழிச் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காத்திருக்க வேண்டிய நிலை
இதுகுறித்து சமூக ஆர்வலர் விஜயபாஸ்கர் கூறுகையில்,
புறவழிச்சாலை இல்லாததால் அனைத்து வாகனங்களும் நகரத்தின் வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலை பொதுமக்கள் சந்திக்கின்றனர்.
மேலும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகள், வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஒரு சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றார்.
சுற்றுலாத்தலம்
வக்கீல் குமணவள்ளல் கூறும்போது, திருத்துறைப்பூண்டி நகரம் குறுகிய நகரம். ஆனால் மக்கள் தொகை அதிகம். அதனால் நகரத்திற்கு வரும் பொதுமக்கள் புறவழிச்சாலை இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கின்றனர்.
குறிப்பாக கிராமங்களில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இங்கே வரும் கிராம மக்கள் மற்றும் அதேபோல சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மன்னார்குடி சாலையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை அரசு தொடங்க வேண்டும். அப்போது தான் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.