ஏர்வாய்பட்டினம் ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் - உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
ஏர்வாய்பட்டினம் ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
சின்னசேலம்,
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏர்வாய்பட்டினம் ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். அதன் பிறகு அவர் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு சின்னசேலம் ஒன்றியகுழு துணைத் தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகந்நாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணி, அய்யாவு, மாவட்ட பிரதிநிதி அன்பழகன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல கடத்தூர் தெங்கியாநத்தம், எலியத்தூர், தொட்டியம், பாண்டியன்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேபி அய்யாசாமி, ராமமூர்த்தி, லோகநாதன், பார்வதிராஜேந்திரன், சண்முகம் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.