அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு முகவரி மாற்றம் செய்ய முகாம் நடத்தப்படும்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று வாழ்விட மேம்பாட்டுக்குழு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி கூறினார்.
கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்க வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் 2-வது கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாம்
கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தர்மபுரி மாவட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி, மின் இணைப்பு பெறுவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும்
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் விஜயமோகன் மற்றும் குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.