வாயில் காயத்துடன் பிடிபட்ட பெண் யானை உயிரிழந்தது


வாயில் காயத்துடன் பிடிபட்ட பெண் யானை உயிரிழந்தது
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:47 PM GMT)

வரகளியாறு முகாமில் வாயில் காயத்துடன் பிடிபட்ட பெண் யானை உயிரிழந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

வரகளியாறு முகாமில் வாயில் காயத்துடன் பிடிபட்ட பெண் யானை உயிரிழந்தது.

காயத்துடன் காட்டுயானை

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் பெண் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்தது. அது விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததோடு பொதுமக்களையும் விரட்டி வந்தது. இதனால் அந்த காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கோழிகமுத்தி முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு, கடந்த 17-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி அந்த காட்டுயானை பிடிக்கப்பட்டது. தொடர்ந்து லாரியில் ஏற்றி வரகளியாறு முகாமுக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்குள்ள மரக்கூண்டில் யானையை அடைத்து, கால்நடை டாக்டர்கள் மனோகரன், விஜயராகவன், சுகுமாரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். நாக்கில் புண் இருந்ததால் பசுந்தீவனம் எடுத்துக்கொள்ள முடியாமல் அந்த யானை சிரமம் அடைந்தது. எனினும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, நோய் தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனாலும் யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று இரவு 8 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தது. இதை அறிந்து வந்த ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம், இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது டாப்சிலிப் வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.


Next Story