மூங்கில்துறைப்பட்டு அருகே விபத்து:வீட்டுக்குள் கார் புகுந்தது; பெண் படுகாயம்
மூங்கில்துறைப்பட்டு அருகே சாலையோர வீட்டுக்குள் கார் புகுந்த விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 42). இவர் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி காரை சுத்தம் செய்து பூஜை செய்தார். இதையடுத்து அவர் காரை ஓட்டிக் கொண்டு கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரம் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த சின்னப்பன் மகள் ஜெனிபா(20) என்பவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கிய ஜெனிபாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லூர்துசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.