கொடைக்கானல்: 50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்


கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் சுற்றுலா பயணியின் கார் சாலையோர தடுப்பு சுவரை இடித்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நேற்று வேலூரில் இருந்து நூர்முகம்மது ( 43) என்பவர் தனக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளார். அந்தக் காரை அதே பகுதியைச் சேர்ந்த முனியன் (39) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு இன்று காலை திரும்பிய சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைச்சாலையில் பயணம் செய்த போது செண்பகனூர் அருகே நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த நூர்முகமது அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் டிரைவர் முனியன் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனடிப்படையில் விரைந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் 50 அடி பள்ளத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்தால் செண்பகனூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவது மற்றும் அதிக கூட்டம் காரணமாக மலைச்சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிட‌த்த‌க்க‌து.


Next Story