ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்: சிதம்பரத்தில் தாறுமாறாக ஓடிய கார்; குடிபோதையில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை
சிதம்பரத்தில் தாறுமாறாக ஓடிய கார் ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. காரில் குடிபோதையில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம்,
தாறுமாறாக ஓடிய கார்
சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் மகன் பாலசுந்தர் (வயது 32). இவர் நேற்று மதியம் சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள காந்தி சிலை பகுதியில், இருந்து தனது காரை ஓட்டிக்கொண்டு சென்றார். அவருடன் கிள்ளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த நாவலன் (53) என்பவரும் இருந்தார்.
கார் பஸ்நிலையம் அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் கொத்தங்குடி தோப்பை சேர்ந்த பன்னீர்செல்வம்(58) என்பவர் காயமடைந்தார்.
தொடர்ந்து, பாலசுந்தர் காரை அங்கு நிறுத்தாமல், வி.ஜி.பி. சாலை வழியாக அதிவேகமாக ஓட்டிச்சென்றார். கீழ வீதியில் தாறுமாறாக ஓடிய அந்த கார் அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது.
போலீஸ் விசாரணை
இதை பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்து காரில் இருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பாலசுந்தர், நாவலன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் குடிபோதையில் அவர்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.