சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்; சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி


சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்; சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி
x

சுவரில் மோதி பள்ளத்தில் கார் பாய்ந்த விபத்தில் சென்னையை சோந்த பெண் என்ஜினீயர், டிரைவர் பலியானார்கள். அந்த என்ஜினீயரின் கணவர், குழந்தை, மாமியார் காயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து சென்றனர்

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள பி.வி.நகரை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (வயது29). இவருடைய மனைவி பவானி (27). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்களுடைய 10 மாத குழந்தை மகிழ். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹானஸ்ட்ராஜின் உறவினர் வீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹானஸ்ட்ராஜ் தனது மனைவி, குழந்தையுடன் காரில் புறப்பட்டார். உடன் ஹானஸ்ட்ராஜின் தாயார் ஜெபராணியும் (47) சென்றார். இந்த காரை சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த பாலாஜி ஓட்டி வந்தார். இவரும் அவர்களுடைய உறவினர் எனக்கூறப்படுகிறது.

சுவரில் மோதி பாய்ந்தது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் முனிக்கோவில் பகுதியில் தற்போது பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த இடத்தில் கார் சென்றபோது, கண் இமைக்கும் நேரத்தில் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது கார் பயங்கரமாக மோதி, பக்கவாட்டில் உள்ள கால்வாய் பள்ளத்தில் பாய்ந்து, உருண்டு விழுந்தது.

இந்த சம்பவத்தை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். காரில் முன் இருக்கையில் இருந்த என்ஜினீயர் பவானி, காரை ஓட்டி வந்த பாலாஜி ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை, மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மேலும் காரில் இருந்த ஹானஸ்ட்ராஜ், அவருடைய குழந்தை மகிழ், தாய் ஜெபராணி ஆகியோர் காயத்துடன் தப்பினர். அவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story