பொங்கல் சீர்வரிசை பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது


பொங்கல் சீர்வரிசை பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது
x

பொங்கல் சீர்வரிசை பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ சாலையோர இரும்பு தடுப்பில் மோதியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

பொங்கல் சீர்வரிசை ஏற்றி வந்தனர்

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்த வர் சீனிவாசராஜன் (வயது 66). இவரது மனைவி அன்னைஜோதி (50). இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். உறவினர்கள் நிர்மலா (66), சரோஜா (68), தென்காசி வள்ளியம்மன் புரம் பகுதியை சேர்ந்த மல்லிகா (52) தென்காசி ரத்னசாமிபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (90) ஆகிய 6 பேரும் ஒரு சரக்கு ஆட்டோவில் பொங்கல் சீர்வரிசை பொருட்களை ஏற்றி கொண்டு கடையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த சரக்கு ஆட்டோவை திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தெற்குதெருவை சேர்ந்த சங்கர்கணேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

இரும்பு தடுப்பில் மோதியது

அந்த சரக்கு ஆட்டோ நேற்று காலை மதுரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் மூலிமங்கலம் பிரிவு அருகே உள்ள அந்தோணியார் சர்ச் எதிரே வந்து கொண்டிருந்தது.

அப்போது, டிரைவரின் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் போடப்பட்டிருந்து இரும்பு தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

7 பேர் படுகாயம்

இதில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னைஜோதி, சீனிவாசராஜன், நிர்மலா, சரோஜா, மல்லிகா, ஈஸ்வரி ஆட்டோ டிரைவர் சங்கர் கணேஷ் ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னைஜோதியின் கால் ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி முறிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து, படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ேவலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 7 பேரும் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story