மரத்தில் மோதிய சரக்கு வேன் உரிமையாளர் படுகாயம்
வேடசந்தூர் அருகே மரத்தில் சரக்கு வேன் மோதியதில் அதன் உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.
நெல்லையை சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது 24). இவர், சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் சாலை அமைக்கும் பணிக்காக இவர் தனது வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதன்படி, சாலை அமைக்கும் பணிக்கு வரும் தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு வருவதும், பின்னர் வேலை முடிந்ததும் அவர்களை ஊரில் கொண்டு சென்று விடும் பணியில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் இன்று இசக்கிராஜா, தொழிலாளர்களுக்கு சாப்பாடு வாங்குவதற்காக வேடசந்தூருக்கு வேனில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் மீண்டும் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர் அய்யனார் கோவில் பகுதியில் அவர் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில், வேனை ஓட்டி வந்த இசக்கிராஜா படுகாயம் அடைந்தார். மேலும் வேனின் முன்பகுதி உருக்குலைந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், இசக்கிராஜாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.